தலைவர்கள்

காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் (ரஹ்)

காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் (ரஹ்)

1896 ஜுன் 5ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் 1937-ல் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார் 1936-ல் மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1945-ல் மதராஸ் மாகான சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சி தலைவரானார். அதே ஆண்டு மதராஸ் மாகான முஸ்லிம் லீக் தலைவரானார். சுதந்திரத்திற்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசிக் கூட்டம் 1947 டிசம்பர் 13,14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள பந்தர் ரோடு காலிக்தினா ஹாலில் நடைபெற்றது.

காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம். அஹமது இப்ராகீம் சாகிப் எம்.எல்.சி, மலபார் சீதி சாகிப் எம்.எல்.ஏ, என்.எம். அன்வர் சாகிப், ஏ.கே. ஜமாலி சாகிப் எம்.எல்.ஏ ஆகிய ஐவர் கலந்து கொண்டனர். 1906-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ’அகில இந்திய முஸ்லிம் லீக்’ இக்கூட்டத்துடன் நிறைவுபடுத்தப்பட்டது. வரும் காலத்தில் முஸ்லிம் லீக் பற்றி இந்தியா, பாகிஸ்தானில் உள்ள கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக முடிவு செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, தனித்தனி கன்வீனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் பாகிஸ்தானுக்கான கன்வீனராகவும், காயிதெ மில்லத் இந்தியாவிற்கான கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 செய்யத் அப்துல் ரஹ்மான் பாபக்கி தங்கள் (ரஹ்)

செய்யத் அப்துல் ரஹ்மான் பாபக்கி தங்கள் (ரஹ்)

அப்துல் ரகுமான் பாபாக்கி தங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதரின் பெயராகும்.

இந்திய தேச வரலாற்றிலும், குறிப்பாக கேரள மாநில வரலாற்றிலும், மறக்க முடியாத ஒரு மாபெரும் அரசியல் ஆளுமை, காலஞ் சென்ற அப்துல் ரகுமான் பாபாக்கி தங்கள் அவர்கள்.

1970களின் முற்பகுதியில் அவர் இவ்வுலகை விட்டு மறையும் வரைக்கும், பாபாக்கி தங்கள், கேரளாவின் மிக முக்கியமான அரசியல் தலைவராக விளங்கினார்.

இன்னும் சொல்லப் போனால், கேரள மாநிலத்திற்குள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பற்றிய பிம்பத்தை, முழுமையாக மாற்றியமைத்த பெருமை அவருக்கு உண்டு.
 
1936 ஆம் ஆண்டில் பாபாக்கி தங்கள், முதன் முதலாகத் தீவிர அரசியலில் அடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து, மலபார் முஸ்லிம் லீக்கின் தலைவரானார்.  

தென் மலபாரைச் சேர்ந்த  மாபெரும் செல்வாக்கு மிக்கத் தலைவரான பானக் காடு பூக்கோயா தங்கள், முஸ்லிம் லீக்கில் இணைவதற்கு, பாபாக்கி தங்கள் அவர்களே முழு முதற் காரணமாக விளங்கினார்.

1956 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் உருவாக்கப்பட்ட போது, ​​கேரள மாநில முஸ்லிம் லீக்கின் தலைவராக பாபாக்கி தங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
சமஸ்த கேரள ஜாமியத் அல் உலமாவின் தலைவராகவும் பாபாக்கி தங்கள் பணியாற்றினார்கள்.

கேரளாவில் மதரஸா கல்வித் துறையை நிர்மாணித்ததற்காக, இன்றளவும் அவர் நினைவு கூறப்படுகிறார்.
 
மேலும், 
- கேரள மாநிலத்திற்குள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பற்றிய தவறான கருத்தோட்டத்தை மாற்றி அமைத்தது,

- கேரள முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவிய அனைத்து வேறுபாடுகளையும் களைந்து ஒற்றுமை ஏற்படுத்தியது,

- 1957 சட்டமன்றத் தேர்தலில் பிரஜா சோசியலிஸ்ட் கட்சி (பி.எஸ். பி.) உடன் முஸ்லிம் லீக் கூட்டணி அமைத்தது,

 - முஸ்லிம் லீக்கின் சார்பாக, காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சித் தலைமைகளுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியது, என பாபாக்கி தங்களுடைய சாதனைகள், முஸ்லிம் லீக் வரலாற்றில் என்றென்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

பாபாக்கி தங்கள், 1973 ஆம் ஆண்டில்,  புனித மக்க மாநகரத்திற்கு யாத்திரை சென்றிருந்தபோது இறை அழைப்பை ஏற்றுக் கொண்டார்கள்.

புனித மக்க மாநகரிலேயே, அவரது ஜனாசா  நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமத் சாகிப்

சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமத் சாகிப்

அரசியல்: சென்னை முஸ்லிம் லீக் அமைப்பாளர் -1958, சென்னை மாநகராட்சி உறுப்பினர் -1959 & -1962,
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் -1964- & 1976, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்- 1980- & 1985
தமிழக சட்டமன்ற உறுப்பினர் -1985 & -1988, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர்- 14.02.1975 முதல் 11.04.1999, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர்-  06.02.1994 முதல் 11.04.1999

வகித்த பொறுப்புகள்: சென்னை மாநகராட்சி கல்விக் குழுத்தலைவர்- 1959 & -1962 , அண்ணாமலை பல்கலைக்கழகம் செனட் சபை உறுப்பினர் -1964 & -1970,சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் -1976- & 1979,தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்க தலைவர்- 1964 & -1978
சென்னை புதுக்கல்லூரி ஆட்சிமன்றக்குழு -1964- & 1978, தமிழ்நாடு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் ளினீமீவீணீt  ஆகியவற்றின் தலைவர்- 1970.,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்- 1989 & -1990, பன்னாட்டு இஸ்லாமியப் பல்கலைக்கழகச் செயற்குழு உறுப்பினர்- 1969,சட்டமன்ற, நாடாளுமன்றப் பொதுத் தணிக்கைக்குழு உறுப்பினர், சட்டமன்ற, நாடாளுமன்ற இருபதுக்கும் மேற்பட்ட குழுக்களின் உறுப்பினர் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு உறுப்பினர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர்மட்ட குழு உறுப்பினர்.

குறிப்பிடத்தக்க சிறப்புகள் : தர்ஜுமத்துல் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியில் தந்தையாரோடு இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். அந்த மொழிபெயர்ப்புப் பிரசுரப் பணியில் கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். 

இந்திய குடியரசுத் தலைவர்கள் டாக்டர் ராதா கிருஷ்ணன், டாக்டர் வி.வி. கிரி, டாக்டர் ஜாஹிர் உசேன்,
சஞ்சீவரெட்டி, பகுருதீன்அலி அஹமது, ஜெயில்சிங், வெங்கட்ராமன், டாக்டர் சங்கர்தயாள்சர்மா ஆகியோருடன் நெருங்கிப் பழகி அவர்களது அன்பைப் பெற்றவர்.

இந்திய பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்மராவ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புடையவர்.
இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இலங்கை அதிபர்கள் ஜெயவர்த்தனா, பிரேமதாசா, சிங்கப்பூர் பிரதமர் லீ.குவான்யூ, மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், பர்மிய அமைச்சர் ஊரஷீந் பாலஸ்தீனிய விடுதலை வீரர் யாஸிர் அரபாத், லிபிய அதிபர் முஅம்மர் கத்தாபி, சவூதி மாமன்னர் பைசல், மொரோக்கோ மன்னர் ஹஸன் போன்ற பலநாட்டு அதிபர்கள், அரசர்களோடு தோழமை பூண்டவர்.

தமிழக முதல்வர்கள் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், பக்தவத்சலம், அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகிய அனைவரிடமும் மிக நெருக்கமான அரசியல் நட்புறவு பூண்டவர்.

1974ஆம் ஆண்டு தமிழக உலமா பெருமக்களால் “சிராஜுல் மில்லத்” (சமுதாயத்தின் ஒளிவிளக்கு) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர்.

பிதாமகன் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிபிடம் அரசியல் பாடம் பயின்று தன் பொது வாழ்க்கையை ஆரம்பித்தவர் சிராஜுல் மில்லத். அன்புத் தலைவர் அப்துஸ் ஸமது சாகிப் தன் வாழ்க்கையை தீனுல் இஸ்லாத்திற்காகவும், தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்காகவும் அற்பணித்தவர். தாய் தமிழ்மொழியின் பெருமைகளை நாளும் உரக்கச் சொன்னவர். வருடத்திற்கு 200 கூட்டங் கள் என்றாலும்கூட 50 வருட பொது வாழ்க்கையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசிய அதிசய தலைவர் சிராஜுல் மில்லத்.

பொது வாழ்க்கையில் சிராஜுல் மில்லத் சந்திக்காத தலைவர்களே இல்லை எனலாம். பல நாடுகளுக்கும் சென்று பன்னுட்ப அறிவை பெற்றவர், கூட்டணி- மாற்று அரசியல் பற்றி பேசும் புதிய கட்சியினர் சிராஜுல் மில்லத் சந்தித்த தேர்தல் அரசியலில் பட்டறிவுப் பெற வேண்டும்.

சிராஜுல் மில்லத்தின் அளகுயர் தோற்றத்தையும், ஆடை அலங் காரத்தையும் கண்டு பலரும் விமர்சித்து வந்திருக்கின்றனர். பல்லாண்டுகாலம் பாராளுமன்ற மேலவை, மக்களவை உறுப்பினராகவும், தமிழக சட்ட மன்ற உறுப்பின ராகவும், உலக நாடு களின் உன்னத தலைவர்களோடு நெருக்கமான தொடர்புடையராகவும் விளங்கிய சிராஜுல் மில்லத் அவர்களை கோடீஸ்வரர் என அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் தனக்கிருந்த ஒரே சொத்து அடையார் இல்லத்தையும், தன் மனைவியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக விற்று விட்டு வாடகை வீட்டில் குடியிருந்த நிலையில் 11.04.1999 அன்று மரணிக்கும் பொழுது சொந்த வீடு இல்லாமல் தலைவர் சிராஜுல் மில்லத்தின் ஜனாஸா புதுக்கல்லூரி ஆடிட் டோரியத்தில் வைக்கப்பட்டிருந்ததை எண்ணி பல்லாயிரம் பேர் கண்ணீர் சிந்தி துஆ செய்தனர்.  இதுவே தன்னி கரில்லாத தாய்ச்சபை தலைவர்களின் தியாக வாழ்க்கையாகும்.
முஜாஹிதே மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப்

முஜாஹிதே மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப்

முஜாஹிதேமில்லத் என்றும் மராட்டியச் சிங்கம் என்றும் சிறப்பான  அடைமொழிகளால் அறியப்பட்டவர் "குலாம் மஹ்மூத் பனாத்வாலா " சாஹிப் அவர்கள்.

இந்திய முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தின் தேசிய முகமுமாக, நாடாளுமன்றத்தில் சிம்ம கர்ஜனை செய்து, வெற்றி கண்ட தலை சிறந்த பார்லிமெண்டேரியன் ஜீ.எம் பனாத்வாலா சாஹிப் அவர்கள்.

தேசிய உணர்வுகள் மங்கிப் போய், பிராந்திய உணர்வுகள் எழுச்சி பெற்றுள்ள காலகட்டத்தில், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பனாத்வாலா சாஹிப் அவர்களை, கேரள மாநிலம், பொன்னானி தொகுதியிலிருந்து ஒரு முறை, இரு முறை அல்ல, ஏழு முறை நாடாளுமன்றத்திற்கு  தேர்ந்தெடுத்த சாதனையை நடத்திக் காட்டியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவராக விளங்கிய பனாத் வாலா சாஹிப் அவர்கள், கேரள மாநில அரசியலின் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகவும், விளங்கினார்கள்.  

1977 முதல் 1989 வரை மலப்புரத்திலிருந்தும், பின்னர் 1996 முதல் 2004 வரை பொன்னானி நாடாளுமன்றத்  தொகுதியிலிருந்தும் மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்காகவும், நாடாளுமன்றத்தில் சிம்ம கர்ஜனை செய்தார் பனாத் வாலா சாஹிப் அவர்கள்.

 ஒரு திறமையான நாடாளுமன்ற உறுப்பினரும், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில்  அற்புதமாகப் பேசக் கூடிய பேராற்றல் பெற்றவருமான பனத்வாலா, ஷா பானு வழக்கு, பாபரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை உரிமைகள் போன்ற மிக முக்கியமான விஷயங்களில் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் உணர்வுகளை நியாயங்களை உணர்த்தி ஆற்றிய பேருரைகள், தேசிய அளவில் மிகவும் பிரசித்தி பெற்றவை.

 கட்ச் மேமன் குடும்பத்தில் பிறந்த குலாம் மஹ்மூத் பனாத்வானா சாஹிப் அவர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில், 1932 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

1967ஆம் ஆண்டே உமர் காடி தொகுதியில் வெற்றி பெற்று மராட்டிய சட்டமன்றம் சென்றவர் பனாத்வாலா அவர்கள்.

காலஞ் சென்ற இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி அம்மையார், ராஜீவ் காந்தி போன்ற மூத்த தேசியத் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் பனாத்வாலா சாஹிப் அவர்கள்.

நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரரான பனாத் வாலா, 2008 ம் ஆண்டு, தமது 74 ஆம் வயதில் காலமானார்கள்.
 இ. அஹ்மது சாகிப்

இ. அஹ்மது சாகிப்

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக்கின் முதல் மத்திய அமைச்சராகப் பதவி வகித்து ஈ. அகமது சாகிப் அவர்களுக்கு, இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் என்றென்றும் சிறப்பான இடம் உண்டு.

ஈ. அகமது சாகிப், 1938 ஆம் ஆண்டு, அப்துல் காதிர் ஹாஜி, எடப்பக்கத்து நபீசா தம்பதியருக்கு மகனாக கண்ணனூரில் பிறந்தார்.

தனது பள்ளிப் படிப்பை முடித்த பின்னர்,  பிரென்னென் கல்லூரியில் பட்டப் படிப்பும், திருவனந்தபுரம் அரசு சட்டக்கல்லூரியில், சட்டமும் படித்து பட்டம் பெற்றார்.

ஈ. அகமது சாகிப் அவர்கள் நான்கு புத்தகங்களை எழுதி உள்ளார்.

ஈ அகமது சாகிப் அவர்கள், 1991, 1996, 1998, 1999, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அகமது சாகிப் அவர்களது அரசியல் வாழ்வில், 1967, 1977, 1980, 1982 மற்றும் 1987ஆகிய ஆண்டுகளில், கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 82 முதல் 87 ஆம் ஆண்டு வரை கேரளத் தொழிற் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

1971லிருந்து 1977ஆம் ஆண்டு வரை, கேரள மாநில ஊரக வளர்ச்சித் துறை தலைவராகப் பணியாற்றினார்.

1979 முதல் 1980 ஆம் ஆண்டு வரை கேரள சிறு தொழில் துறையின் நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

1981 முதல் 1983ம் ஆண்டு வரை, அகமது சாகிப் அவர்கள் கண்ணனூர் முனிசிபல் கவுன்சில் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

குறிப்பாக, 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை, வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

மேலும் ஏப்ரல் 2009 முதல் ஜனவரி 2011 வரை, அகமது சாகிப் அவர்கள் ரயில்வே துறை ராஜாங்க மந்திரியாகப் பொறுப்பு வகித்தார்.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ம் தேதி, அகமது சாகிப் அவர்கள், வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரியாக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜூலை, 2011 முதல், அகமது சாகிப் அவர்கள், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக, கூடுதல் பொறுப்பு வகித்தார்.

மேற்கூறிய இத்தனை பழுத்த அரசியல் அனுபவம் மிக்க அகமது சாகிப் அவர்கள், 2008 ஆண்டு முதல் தனது இறுதிக் காலம் வரை, தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவராக மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்.

ஈ.அகமது சாகிப் அவர்களது நெடிய நாடாளுமன்ற வரலாற்றில், வெளியுறவு, ரயில்வே, சுற்றுலா மற்றும் போக்குவரத்து, விஞ்ஞானத் தொழில் நுட்பம் போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த பல பாராளுமன்றக் கமிட்டிகளில் அங்கம் வகித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு, இந்திய அரசு, அகமது சாகிப் அவர்களை, இந்திய கத்தார் நாடுகளுக்கிடையேயான உயர் மட்டக் குழுவிற்கு துணைத் தலைவராக நியமனம் செய்தது.

அபார திறமையும் தேசப் பற்றும் மிக்க ஈ அகமது சாகிப் அவர்கள், 1991 முதல் 2014 ஆம் ஆண்டு வரை, ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய பிரதிநிதியாக சிறப்பாகப் பணியாற்றி உள்ளார்.

1984 ஆம் ஆண்டு, இந்திய பிரதமரின் பிரதிநிதியாக வளைகுடா நாடுகள் ஒத்துழைப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டார்.

இவ்வாறாகத் தான் பிறந்த நாட்டுக்காக, தன் மாநில மக்களுக்காக, தன் சமுதாயத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஈ. அகமது சாகிப் அவர்களது பொது வாழ்வு, அவர் நேசித்த தேசத்தின் நாடாளுமன்ற வளாகத்தில், ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்களுடன் இணைந்து கூட்டு பாராளுமன்ற அமர்வை நடத்திக்கொண்டிருந்த போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, 2017, பிப்ரவரி 1 ஆம் தேதியன்று அகமது சாகிபின் உயிர் பிரிந்தது.