முக்கிய செய்தி

சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்- அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி உரை.

சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்- அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி உரை.
#நாடாளுமன்றத்தில்_நவாஸ்கனி_MP

சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்- அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி உரை.
--
நன்றி அவைத்தலைவர் அவர்களே,

சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்-  அரசியல் சாசன திருத்த மசோதா மீது உரையாற்றுவதற்காக வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கக்கூடிய சத்தீஸ்கரில்  மகாரா சமூகத்தினரை மலைவாழ் பட்டியலில் சேர்ப்பது வரவேற்கத்தக்கது.

இந்த மசோதாவை வரவேற்கிறேன்.
இந்த நேரத்தில் எங்களுடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் தொடர் முயற்சியால் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய சமூகத்திலே புறக்கணிக்கப்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகத்தை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்த்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஒன்றிய அரசுக்கும், மாண்புமிகு அமைச்சர் திரு அர்ஜுன்முண்டா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் பல ஆண்டுகளாக தங்களையும் மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ஒன்றிய அரசு விரைவில் அவர்களை அந்த பட்டியலில் இணைக்க பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 நாடு முழுவதும் சமூக, கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலையிலே இருக்கும் சில பிரிவினர் தங்களையும் இந்த பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஆனால் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு தான் அவர்களை சேர்க்க முடியும் என்பது துரதிஷ்டவசமானது.

புதிதாக ஒரு பிரிவினர் சமூக கல்வி பொருளாதார வேலை வாய்ப்பில் பின் தங்குவது கிடையாது. 

நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்வாதாரம் எப்படி இருந்தது அதேபோன்றுதான் தற்போது பல பிரிவினர் இருந்து வருகிறார்கள்.

அப்படி என்றால் கடந்த 75 ஆண்டுகால நாட்டின் சுதந்திர வரலாற்றில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள், வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதை அரசு ஒப்புக்கொள்கிறதா.

இந்த மசோதாவோடு இந்த பட்டியல் நிறைவடையும் என்ற உத்தரவாதத்தை அரசு கொடுக்க முடியுமா?

எனவே இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முன்னேறாத நிலையில் இருக்கும், சமூகத்தில் அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்கள் தங்களையும் இந்த பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வருகிறார்கள். எனவே மாநிலங்கள் முன்வைக்கும், நியாயமான கோரிக்கைகளை பரிசளித்து சமூகப் பொருளாதார வேலை வாய்ப்பு மிகவும் பின்தங்கி இருக்கும் இன்னும் பல பிரிவினர்களையும் இந்த பட்டியலின வகுப்பில் இணைக்க அரசு துரித நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எங்களுடைய பகுதிகளில் உள்ள மீனவ சமுதாயத்தினர் பலர் தங்களையும் பழங்குடி மக்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடலை மட்டுமே நம்பி வாழக்கூடிய மீனவர் சமுதாயத்தினர், இன்னமும் சமூக பொருளாதார கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.
அவர்களையும் முன்னேற்றப் படுத்தும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் இட ஒதுக்கீடுகளை பெறும் வகையில் பழங்குடியின பட்டியலில் அவர்களை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் மலைவாழ் பட்டியலில் சேர்க்க சொல்ல கூடிய பல பிரிவினர் பல சமூகத்தினர் பிற மாநிலங்களில் மலைவாழ் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் பல்வேறு கமிட்டிகள் அமைத்து பலமுறை மாநில அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு பரிசிலிக்காத காரணத்தினால் அந்த சமூகத்தை சார்ந்த இளைஞர்கள் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு குறும்பர் இனம் லம்பாடி போன்ற சமூகத்தினர் இதற்காக தொடர்ந்து கோரிக்கை வைக்கிறார்கள். ஒன்றிய அரசு இதனை பரிசிலிக்க வேண்டும்.

இதுபோல இவர்களுக்கு வழங்கப்படும் SC ST மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப், 


இஸ்லாமியர் மாணவர்களுக்கான பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் எப்படி வஞ்சிக்கப்பட்டதோ,

 அதேபோல இந்து மதத்தில் பாதுகாவலர் என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த அரசு இந்து மதத்தை சார்ந்த SC ST மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம்.

ஒருபுறம் பட்டியலின பழங்குடியின வரிசையில் பொருளாதார வேலைவாய்ப்பில் பின்தங்கிய மக்களை சேர்க்கக் கூடிய நிலையில், மறுபுறம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார் மயமாக மாற்றும் பணியையும் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கும் போது அங்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும்.

எனவே, அரசு பட்டியலின மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அது மட்டுமல்லாது சமூகத்தில் சம வாய்ப்பு ஏற்படுத்தும் வண்ணம் வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளை சிதைக்கும் வண்ணம் இந்த அரசு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற நடைமுறையை இந்த அரசு கையில் எடுத்திருப்பது இட ஒதுக்கிடையே குழி தோண்டி புதைக்கக்கூடிய ஒரு முடிவு.

எனவே சமூக பொருளாதார வேலை வாய்ப்பு காலம் காலமாக பின்தங்கி இருக்கும் மக்களையும் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் உயர் வகுப்பினரையும் இட ஒதுக்கீடு என்ற முக்கியமான அங்கத்தில் இணைத்து வைத்து பார்ப்பது சரியான முடிவு அல்ல.


அதேபோல பட்டியல் வகுப்பில் இணைக்கப்படும் மக்கள் அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் அரசு வழங்கும் இட ஒதுக்கீடு மூலம் பெறக்கூடிய நன்மைகள் என அனைத்தையும் முறையாக பெறுகின்றார்களா, என்பதனை ஆய்வு செய்யும் வண்ணம்  குழுக்களை அமைத்து முறையாக கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

எனது பாராளுமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்காக ஏகலைவா பள்ளியை அமைத்து தருமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல அவர்களுக்கு பிரத்தியேகமாக திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையங்களையும் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மசோதாவில் பேச வாய்ப்பளித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
---
இவ்வாறு நாடாளுமன்ற மக்களவையில் பட்டியலின வகுப்பினருக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி உரையாற்றினார். https://fb.watch/hA7kpTnpUE/