முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது பவள விழா அகில இந்திய மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது பவள விழா அகில இந்திய மாநாடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது பவள விழா அகில இந்திய மாநாடு
ஒன்றாவோம்! ஒன்றிணைப்போம்!
உன்னைத்தான்! உனக்குத்தான்! உன்னால்தான்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 75வது ஆண்டு விழாவை - பவள விழாவாகவும் அகில இந்திய மாநாடாகவும் நடத்துவதற்கு, அதன் மூலம் புதிய பாரத நாட்டு சரித்திரத்தைப் படைப்பதற்கும் தேசிய நிர்வாகிகளின் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2023 மார்ச் 10-ஆம் நாள் வெள்ளிக்கிழமை இ.யூ.முஸ்லிம் லீகின் 75-வது ஆண்டு துவங்குகிறது.
1948 மார்ச் 10 புதன்கிழமை, சென்னை அரசு விருந்தினர் மாளிகையில் - இன்றைய ராஜாஜி ஹாலில் இ.யூ.முஸ்லிம் லீக் பிறப்பெடுத்தது.
கடந்த 74 ஆண்டுகளாக பொறுப்பான அரசியல் பயணத்தைத் தொடர்ந்து, இப்போது 75-வது வருடப் பயணத்தைத் தொடர்ந்திட முடிவெடுத்திருக்கிறது.
இந்த 75-வது ஆண்டுப் பயணத்தை நாடும் ஏடும் நானிலமும் ஏற்றுப்போற்றும் பெருவிழாவாக நடத்திக் காட்டிட வேண்டும் என இ.யூ.முஸ்லிம் லீகின் நிர்வாகிகள் ஒரு மித்த கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மிகப்பெரும் எழுச்சியோடு இ.யூ.முஸ்லிம் லீகின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதிலும் எதிரொலிக்கும் வகையில் நடத்திட வேண்டும் என்று விடாப்பிடியாக வற்புறுத்தி வருகிறார்கள்.
ஜனவரி 18 புதன்கிழமை அன்று 75-வது பவள விழா அகில இந்திய மாநாடு பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம் கேரளத் தலைவர்களால் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.
75-வது ஆண்டு பவள விழா 2023 மார்ச் வெள்ளிக்கிழமை சென்னை ராஜாஜி ஹாலில் தேசப்பாதுகாப்பு உறுதிமொழி யோடு துவங்குவது எனவும், அன்று மாலை சென்னை ஓஎம்ஆர்-ராஜீவ் காந்தி சாலை ஒய்எம்சிஏ மைதானத்தில்
4 மணிமுதல் இலட்சத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பிரமாண்டமான மாநாடு நடத்துவது எனவும் அதில் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு, நவாப் மஸ்ஜித் வளாகத்தில் துயில் கொள்ளும் காயிதே மில்லத் அவர்களின் அடக்கத்தலத்திலும் ஜியாரத்-துஆ மஸ்லிஸ் நடத்துவது எனவும் தெரிவிக்கப்பட்டது.
75-வது ஆண்டு விழா ஒரு நாள் விழாவுடன் நடத்தி முடித்தால், அது குறையாகவே கருதப்படும் என்று இளைஞர்களின் ஒட்டுமொத்த கருத்து சரியென ஏற்று, மார்ச் 9 வியாழன் அன்றும் தேசிய செயற்குழு மற்றும் அகில இந்திய பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்வுகளை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 09-03-2023 (வியாழன்)நிகழ்ச்சிகள் யாவும் சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் நாள் முழுவதும் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை 2023 மார்ச் 10-இல் நடக்கும் இ.யூ.முஸ்லிம் லீகின் 75-வது ஆண்டு விழா துவக்கம்தான்! அதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள மாநிலம் ஒவ்வொன்றிலும் இந்த விழா தொடர்ந்து நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு மாநிலத்திலும் சார்பு அமைப்புகளின் மாநாடுகள் நடக்கும் எனவும், இறுதியாக டெல்லியில்
75-வது ஆண்டு பவள விழா நிறைவு விழாவாக இரண்டு நாள் நடக்கும் எனவும் அதன் மூலமே இந்திய அரசியலில் இதுவரை கண்டிராத அரசியல் மாற்றம் ஏற்படும் வகையில் செயல்திட்டம் பிரகடனப்படுத்தப்படும் என அறிவித்திருக்கின்றனர்.
இளைஞர் களின் இன்றையக் கனவுகள் தாமே நாளைய வரலாற்று நனவுகள் ஆகின்றன!இன்றைய இளைஞர்கள் தாமே, நாளைய சமுதாயத் தலைவர்கள்!
நாவலர் ஏ.எம்.யூசுப் சாஹிப் அவர்கள் அந்தக் காலத்தில் மேடைப் பேச்சைத் தொடங்கும் போது, ‘நாளைய சமுதாயத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பூரணப் பொறுப்பேற்க வேண்டிய என்னரும் சமுதாய இளைஞர் கூட்டமே!’ என்று விளித்துத்தான் சொற் பொழிவைத் துவங்குவார்!
எஃகு உள்ளம் கொண்ட இளைஞர் பட்டாளமே! என்று சிந்தனைச் செம்மல் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் தனது பேச்சைத் தொடர்வார்!
அந்தப் பாரம்பரியம் மங்காமலும் மறையாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நாமும் இளைஞர் கூட்டத்தை எழும்ப அழைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.!
சமுதாயம் எப்போதும் அல்லாஹ்வைத் தவிர யார்க்கும் அஞ்சிடாது! அண்ணல் வழியில் அணிவகுத்துச் செல்லத் தயங்கிடாது! என்பது வரலாறு ஆகும். அந்த வரலாறு நாளைக்கும் நாட்டில் தொடர வேண்டும்; நாளங்களில் எல்லாம் படர வேண்டும்! இதற்காக முன்னிற்போர் யார்! முந்தி வருவோர் எவர்? முனைந்திட முந்துவோர் யார்! இவர்கள் எவரும் என்னரும் இளைய சமுதாய இளங்குருத்துக்கள் தாமே! சமுதாயத்தின் வீரர்கள் தாமே! சங்க நாதம் எழுப்பும் தீரர்கள் தாமே!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றார்கள்! இ.யூ.முஸ்லிம் லீகைத் தூக்கி சுமக்கவும், அதனை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வீரதீர செயல்பாடுகளை ஆற்றவும், இந்திய அரசியலில் புதிய எழுச்சி வரலாறை உருவாக்கவும் எழுங்கள்! எழுப்புங்கள்! எனக் குரல் எழுப்பிடவும் சமுதாயத் தம்பிகளால் முடியும்! அதனால் சமுதாயம் இந்தத் தம்பிகளை- தங்கக் கம்பிகளை அழைக்கிறோம்.
இது அத்தனையும் உனக்குத்தான்! நடக்கப் போவது அனைத்தும் உன்னால்தான்! ஆகவேதான் உன்னைத்தான் என்று அழைக்க வேண்டியவனாக இருக்கிறேன்!
எழுச்சிக்கு வித்திட எழுந்து வாருங்கள்!
மகிழ்ச்சியை முத்திட சூழ்ந்து வாருங்கள்!
- பேராசிரியர் கே.எம்.கே