முக்கிய செய்தி

ஒன்றிய அரசு பதோ பர்தேஷ் திட்டத்தை நிறுத்தியது ; சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி கற்கும் கனவை பறிக்கும் செயல் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் திருச்சி ஏ.எம்.எச்.அன்சர் அலி அறிக்கை.

ஒன்றிய அரசு பதோ பர்தேஷ் திட்டத்தை நிறுத்தியது ; சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி கற்கும் கனவை பறிக்கும் செயல் முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் திருச்சி ஏ.எம்.எச்.அன்சர் அலி அறிக்கை.
ஒன்றிய அரசு பதோ பர்தேஷ் திட்டத்தை நிறுத்தியது ; சிறுபான்மை மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி கற்கும் கனவை பறிக்கும் செயல்
முஸ்லிம் மாணவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் திருச்சி ஏ.எம்.எச்.அன்சர் அலி அறிக்கை.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை 
மாநில பொதுச் செயலாளர் 
திருச்சி ஏ.எம்.எச். அன்சர் அலி விடுத்துள்ள அறிக்கையில் 
 
பதோ பர்தேஷ் திட்டம் PADHO PARDESH சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடன்களுக்கு ஒன்றிய அரசு சிறுபான்மை விவகார அமைச்சகம் (MoMA) வழங்கப்பட்டு வரும் மானியத் தொகை; இத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிகள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலை பட்டம், எம்.ஃபில்., மற்றும் பிஎச்.டி., போன்ற உயர் படிப்பைத் தொடரவும் மேலும் வேலைவாய்ப்பை மேம்படுத்தவும் மாணவர்களின் வாழ்வில் முன்னேற்றத்திற்கான திட்டமாகவும் இருந்து வருகிறது.
 
பதோ பர்தேஷ் மானியத் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாணவர்களின் முழுக் கடன் தொகையிலும் வட்டி மானியங்களை (IBA) இந்திய வங்கிகள் சங்கத்தின் கல்விக் கடன் திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தடைக்காலத்தில் ( படிப்பு காலம், வேலை கிடைத்த ஒரு வருடம் அல்லது ஆறு மாதங்கள் ) செலுத்த வேண்டிய வட்டி தொகையை ஒன்றிய அரசால் செலுத்தப்படுகிறது. தடைக்காலம் முடிந்த பிறகு, தற்போதுள்ள கல்விக் கடன் திட்டத்தின்படி, நிலுவையில் உள்ள கடன் தொகைக்கான வட்டியை மாணவர்கள் செலுத்த வேண்டும். 
இத்திட்டத்தில் 35% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவிகள் விண்ணப்பிக்காத பட்சத்தில் ஆண் மாணவர்களுக்கு அந்த இடங்களை மாற்றலாம். சிறுபான்மையினர் நலனுக்காக இத்திட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சிக் காலத்தில் பதினைந்து அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
 
ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் தற்போது பதோ பர்தேஷ் திட்டத்தை கல்விக் கடனுக்கான மானியத் திட்டத்தை நிறுத்தியுள்ளது. 
 
2022- 2023 முதல் பதோ பர்தேஷ் திட்டம் நிறுத்தப்படுவது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் இந்திய வங்கிகள் சங்கம் மூலம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
இத்திட்டம் இதுவரை நியமிக்கப்பட்ட நோடல் வங்கியான கனரா வங்கி மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 2022 மார்ச் 31-இல் உள்ள பயனாளிகள் மட்டுமே தடைக்காலத்தில் உள்ள கடனுக்கான வட்டி மானியத்தைத் தொடர்ந்து பெறுவார்கள் என செய்தியை அறிவித்திருக்கிறது.
 
ஒன்றிய அரசு பதோ பர்தேஷ் திட்டத்தை தற்போது நிறுத்தியுள்ளது; கல்விக் கடன் மானியம் ரத்து என்பதை மாணவர்கள் செய்தித்தாள் மற்றும் ஊடகங்களை பார்த்து அறிந்திருப்பது மாணாக்கர்கள் மத்தியில் பேரதிர்ச்சியாக உள்ளது. நாள்தோறும் என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ என்கிற அச்சத்தோடு தான் மாணவர்கள் பத்திரிக்கைகளை விரிக்க வேண்டி இருக்கிறது.
 
ஒன்றிய அரசு இது போன்றதொரு நடவடிக்கைகளால் சிறுபான்மை மாணவர்களின் கல்வி கற்கும் மனநிலை பாதிக்கப்படுவதோடு எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
 
கல்விக் கற்பதற்கு மாணவர்களை ஊக்குவித்து ஒன்றிய அரசு பல புதிய திட்டங்களை வகுக்க வேண்டுமே தவிர, மாணவர்கள் பயன் பெற்று வரும் சிறந்த திட்டங்களை ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு ரத்து செய்வது என்பது ஏற்றடையதல்ல.
 
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனில் ஒன்றிய அரசு பொறுப்பற்ற நிலையை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது; பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள சிறுபான்மை சமூகத்தின் மாணாக்கர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்விக் கற்கும் கனவை பறிக்கும் செயலாக ஒன்றிய அரசு செயல்படுகிறது, பதோ பர்தேஷ் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணத்தை ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் இதுவரை தெரிவிக்கவில்லை.
 
ஒன்றிய அரசு இதற்கு முன்னதாக சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் தேசிய பெல்லோஷிப் மற்றும் ஃப்ரி மெட்ரிக் கல்வி உதவித் தொகையை ரத்து செய்ததையடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் உள்ள நிலையில் தற்போது பதோ பர்தேஷ் திட்டத்தை நிறுத்தியதை முஸ்லிம் மாணவர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
 
ஒன்றிய பிரதமர் மோடி அரசு பதோ பர்தேஷ் கல்விக் கடன் மானியத் திட்டத்தை மீண்டும் மாணாக்கர்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என முஸ்லிம் மாணவர் பேரவை ( எம்.எல்.எப்) கோரிக்கை விடுக்கிறது. என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.